மாமல்லபுரத்தில் களை கட்டியது கோடை சுற்றுலா MakkalPost

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து, கடற்கரை சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையால் கோடை சுற்றுலா சீசன் களை கட்டியுள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் சுற்றுலா பயணிகளும், குடும்பத்தினரும் வருகை தருகின்றனர். தற்போது கோடை வெயிலையும் பார்க்காமல் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள், மதியம் முதல் மாலை வரை, கடற்கரைக் கோயில் ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்து விட்டு, அங்குள்ள மர நிழலில் ஓய்வெடுத்து விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர்.
மாலை நேரத்தில் கடற்கரைக் கோயிலை கண்டு ரசித்தபடி, கடல் அருகே சென்று கடல் அலைகளுடன் விளையாடும், கடலில் குளித்தும் பொழுதைக் கழித்து மகிழ்கின்றனர்.