April 19, 2025
Space for advertisements

மகான் ஆதிசங்கரர் அவதரித்த ‘காலடி’ மண் தேடி ஒரு பயணம்! MakkalPost


கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ளது காலடி. இந்த நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக திட்டமிட்டு வந்தேன். அது சமீபத்தில் நிறைவேறியது.
காலடி ஏன்? காலடியில் என்ன சிறப்பு? காலடியில்தான் மகான் ஆதிசங்கரர் அவதரித்தார். அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை போதித்தவர் இந்த மகான்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம் சென்றடைந்தேன். அங்கு நண்பர் பாலமுருகன் பணிபுரிந்து வருகிறார். அவரையும் சந்தித்து நீண்ட காலம் ஆனதால் இந்தப் பயணத் திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
மாலை 3 மணிக்கு திருவனந்தபுரம் ரயிலில் ஏறி கேரளத்துக்குப் பயணமானேன். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டேன். ரயில் பயணத்தை நான் மிகவும் விரும்புவேன். அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன். பரபரப்பான வாழ்க்கையிலிருந்து சற்று இளைப்பாற கிடைக்கும் நாட்களில் இந்த ரயில் பயணங்களை விரும்புவேன். இருள் சூழும் வரை இயற்கை காட்சிகளை ரசித்த படியே அமர்ந்திருந்தேன். தமிழர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் என்று ரயிலில் பலவித மனிதர்களின் தரிசனம் கிடைத்தது. அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைந்தேன்.
பாலமுருகன் வரவேற்று அழைத்துச் சென்றார். சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு, காலடி செல்வதற்கு தயாரானேன். அங்கிருந்து ஆலுவா நகருக்கு பேருந்தில் சென்று பின்னர் அங்கிருந்து வேறொரு பேருந்தில் காலடி செல்ல வேண்டும்.
காலை 9 மணி என்பதால் அனைத்து நகரங்களிலும் இருப்பது போல் கூட்டம் அலைமோதியது. பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்பவர்கள் என்று பரபரப்பாக இருந்தனர் கேரள மக்கள். சமீபத்தில் புரட்டிப் போட்ட வெள்ள பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீண்டிருந்தது எர்ணாகுளம். சில இடங்களில் வெள்ள பாதிப்பின் தடங்களை பார்க்க முடிந்தது. 1 மணி நேரத்தில் ஆளுவா சென்றடைந்தோம்.
கேரளத்துக்கு எப்போது சென்றாலும் காலை உணவாக புட்டு கடலை உண்பதை மிகவும் விரும்புவேன்.
நம்ம ஊரில் இட்லி, சாம்பார் போல் கேரளாவில் புட்டும், கடலையும் மிகவும் விரும்பப்படும் காலை உணவாக இருந்து வருகிறது.
பெரும்பாலான உணவகங்களில் புட்டு கடலை, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவை காலை உணவாகக் கிடைக்கின்றன.
ஆலுவா பேருந்து நிறுத்தம் அருகே வரிசையாக சில உணவகங்கள் இருந்தன. அதில் ஒரு உணவகத்துக்குச் சென்று அமர்ந்தோம். நண்பர், என்ன வேண்டும் ? இட்லி அல்லது தோசை சாப்பிடுகிறயா? என்று கேட்டார்.
நான், புட்டுக் கடலை ! என்றேன் விழி விரிய.
புட்டுக் கடலை சாப்பிட்டுவிட்டு, சாயா (தேநீர்) குடித்தோம். காரசாரமாக இருந்த கடலை பின்னர் சூடான சாயா என்று நாவிற்கு இதமாக இருந்தது.
அங்கிருந்து காலடிக்கு செல்லும் பேருந்துக்காக 15 நிமிடங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது. பின்னர், அந்தப் பேருந்தும் வந்தது. காலியாக இருந்த பேருந்தில் எங்கள் இருவரையும் சேர்த்து 10 பேர் வரை மட்டுமே இருந்திருப்போம்.
வெயில் சற்று அதிகம் என்றாலும் சாலை இருப்பதே மரங்களுக்கு நடுவில் குளிர் தென்றல் வீசிக் கொண்டே இருந்தது.
நெடுஞ்சாலை வழி இல்லாததால், பல சிற்றூர்கள் வழியாக பேருந்து வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது.
கேரளாவில் பேருந்துகளை அதிவேகமாகவே ஓட்டுநர்கள் இயக்குகின்றனர் என்று எனக்கு தோன்றுகிறது. நண்பரும் அதை வழிமொழிந்தார்.
அடிக்கடி விபத்துகள் நேர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களின் வேகத்துக்கு பேருந்தும் ஈடுகொடுக்கிறது. மலை பகுதிகளில் செல்வதற்கு ஏற்ற வகையில் டாடா தயாரிக்கும் பேருந்துகள் அங்கு இயங்குகின்றன.
நம்மூரில் நடத்துநர் விசில் அடிப்பது போல் அங்கில்லை. ஏறும் வழி மற்றும் இறங்கும் வழி இருக்கும் பக்கத்தில் பேருந்தின் ஒரு கோடியிலிருந்து ஓட்டுநர் இன்ஜின் வரை கயிறு ஒன்று கட்டப்பட்டு மணி தொங்கவிடப்பட்டுள்ளது. யாராவது இறங்க வேண்டுமானால், அந்த கயிறை இழுக்கிறார்கள். ஓட்டுநர் அருகே இருக்கும் மணி ஒலித்ததும் வேகம் குறைக்கப்பட்டு வண்டி நிறுத்தப்படுகிறது.
காலடி செல்லும் வழியில் சில இடங்களில் சாலை வசதி சரியாக இல்லாததால் வெகு நேரம் பயணிப்பது போல் இருந்தது. இயற்கையை ரசித்தபடியே 1 மணிநேரத்தில் காலடி சென்றடைந்தோம்.
அந்த ஊர் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே பெரிய உயரமான கோபுரம் இருந்தது. பேருந்தை விட்டு இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தவரிடம் அங்கு என்ன?
இருக்கிறது என்று பாலு விசாரித்தார். பின்னர், என்னிடம் எதுவும் கூறாமல் அங்கு அழைத்துச் சென்றார்.
அவளுடன் அந்த இடத்துக்குச் சென்றேன். கோபுர வடிவில் இருக்கும் அதற்குள் நுழைந்தோம். படிகள் ஏதுமின்றி வளைந்து ஏறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றி ஏறியபடி நாம் செல்லும்போது ஒரு பக்கத்தில் மகான் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்த்து வியந்தேன்.
நாம் எதையும் தொடக் கூடாது என்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அதை கண்காணிப்பதற்கான கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன.
அந்த மண்டபத்தை முழுமையாக பார்த்தால், சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடியும். தமிழர்கள் கணிசமான அளவில் காலடிக்கு வருவதால், தமிழிலும் அவருடைய வரலாறு தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எட்டுமாடி கொண்ட அந்த மண்டபத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழிதான். சற்று தலை சுற்றும் மாதிரி இருந்தது. அங்கிருந்து அவர் பிறந்த இடம் இருக்கும் இடத்துக்குச் செல்ல திட்டமிட்டோம். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது கொஞ்ச தூரத்தில் இருப்பதாக கூறினார். அதனால், நடந்து செல்லலாம் என்று முடிவு செய்து நடந்தோம். வழியில் சங்கராச்சார்யா சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைந்திருந்தது.
இங்கு, சம்ஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளின் எழுதப்பட்ட முக்கியமான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன.
புத்தகம் அச்சிடவும் படுகின்றன. முதன்மையாக சம்ஸ்கிருத ஆராய்ச்சிக்கு இந்தப் பல்கலைக்கழகம் பயன்படுகிறது. காலடியில் இருப்பது பிரதான மையம் (மெயின் கம்பஸ்). இதன் கிளை மையங்கள் தலைநகர் திருவனந்தபுரம் பையனூர், திருச்சூர், பன்மனா, துறவூர், எட்டுமானூர், திரூர், கோயிலாண்டி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன என்பது கூடுதல் தகவல்.
உச்சி வெயில் எட்டிப்பார்க்கும் நேரம் என்பதால் சோர்வடைந்துவிட்டோம். செல்லும் வழியில் ஒரு கடையில் லெமன் சோடா அருந்தினோம். சற்றே தாகம் தணிந்ததுடன் அந்த வெயிலுக்கு வயிறு குளிர்ந்தது. கடைக்காரரிடம் விசாரித்தபோது சங்கரர் பிறந்த இடம் சற்று தூரத்தில் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், புதிய இடம் என்பதாலோ என்னவோ நெடுந்தூரம் செல்வது போலவே இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு நிச்சயம் இருக்கும்.
பூர்ணா நதிக்கரை அருகே இருந்த மடத்தை கண்டு சென்றடைந்தோம். சிவபெருமானின் வரம் வேண்டி கிடைத்த செல்வம் சங்கரர். இப்போது அங்கு மடம் இருக்கிறது. அவரது தாயார் உடல் தகனம் செய்யப்பட்ட இடமும் இந்த மடத்துக்குள் அமைந்துள்ளது.
அதற்கு வெளியே பூர்ணா நதி ஓடிக்கொண்டிருந்தது. அண்மையில் மழை பெய்ததால் நீரின் அளவு அதிகமாக இருந்தது.
ஆதிசங்கரரின் இளமைப் பருவத்தில் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவரால் வெகுதூரத்தில் இருந்த நதியில் சென்று நீராட முடியவில்லை. தாயாருக்காக இறைவனைப் பிரார்த்தித்து நதியை வீடருகே ஓடச் செய்தார் சங்கரர். அந்த நதி இன்றும் காணப்படுகிறது. ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருந்தபோது முதலை அவரது காலை கவ்வியது. அப்போது, ​​அருகில் இருந்த தாயார் செய்வதறியாது தவித்தார். உடனே, எனக்கு நீங்கள் துறவறம் மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு வேண்டினார் சங்கரர். தாயார் சம்மதம் தெரிவித்ததும், முதலை அவரை பிடியிலிருந்து விடுவித்ததாகக் கதை உண்டு.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements