பஞ்சாப் மாநிலத்தை அறிந்து கொள்ளலாமா? MakkalPost

பஞ்சாப் வடமேற்கு இந்தியாவில் அமைந்துள்ளது. வளமான வண்டல் மண் பூமி. விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட. நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட மாநிலம். சீக்கியர்களே இங்கு பெருமளவில் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் பிராந்திய மொழி பஞ்சாபி.
பஞ்சாப் மாநிலத்தைச் சுற்றிலும் ஜம்மு – காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்திய மாநிலங்களும், மேற்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணமும் சூழ்ந்துள்ளன.
சிந்து நதியின் கிளை நதிகளான் ரவி, பியாஸ். சட்லெஜ், ஜீலம், சேனாப் ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்பதால் பஞ்சாப் எனப்படுகிறது. பஞ்சாப் என்ற சொல்லுக்கு ஐந்து நதிகள் பாயும் பூமி என்பதே பொருள்.
இம்மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி.யில் இமயமலையின் அடிவாரத்தில் 2400 கி.மீ. நீளத்திற்கு 180 மீ. முதல் 500 மீ. வரை உயரம் கொண்ட ஏற்ற இறக்கமான சிவாலிக் மலைக் குன்றுகள் உள்ளன. இவை 10 முதல் 50 கி.மீ. வரை அகலம் கொண்டவை.
பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள “சண்டிகர்’ நகரமே (யூனியன் பிரதேசம்) பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாகும். 50,362 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலம் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சில வரலாற்றுத் தகவல்கள்!
சிந்து சமவெளி நாகரிகம் பஞ்சாப் பகுதி வரை பரவி உள்ளது. அவற்றின் தொல்லியல் களங்கள் “ரூப் நகர்’ போன்ற இடங்களில் உள்ளன. இங்கு ஒரு சிறிய தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது.
வேதகால நூல்களில் பஞ்சாப் பற்றிய தகவல்கள் உள்ளன. மகாபாரதத்தில் பஞ்சப் “திரிகர்த்த நாடு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய பஞ்சாப் என்பது இன்றைய பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள், சண்டிகர் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசங்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் உள்ளடக்கியது.
கி.மு. 326 – இல் கிரேக்க மன்னர் அலெக்ஸோண்டர் மேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்துகுஷ் கணவாய் வழியாக படையெடுத்து வந்து பஞ்சாபைக் கைப்பற்றி தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். கி.மு. 305 – இல் சிறப்புடன் திகழ்ந்த மெüரியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது.
இந்த பஞ்சாப் வழியாகத்தான் கிரேக்கர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் மற்றும் மத்திய ஆசிய இனத்தவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
இதனால் செழிப்பான பஞ்சாப் சார்ந்த பகுதிகளை காந்தார அரசர்கள், நந்தர்கள், மெரியர்கள், கங்கர்கள், குஷாணர்கள், குப்தர்கள், பாலர்கள், கூர்ஜரர்கள், காபூல் சாகிப்கள், துருக்கியர்கள், மற்றும் ஆப்கானியர்கள் எனப் பல பேரரசர்கள் ஆட்சி செய்தனர்.
காலப்போக்கில், பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து வட இந்தியாவை வென்ற பாபரின் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதம் தோன்றி வலுப்பெறத் தொடங்கியது. அவர்கள் பஞ்சாப் பகுதியை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தனர்.
புவியியல் அமைப்பு காரணமாக இப்பகுதியின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் தொடர்ந்து பலரும் தாக்குதல் நடத்தியதால் பல போர்களை பஞ்சாப் பிரதேசம் சந்தித்துள்ளது.
பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பத்தில் பஞ்சபைக் கைப்பற்றிய முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் நடந்த போரில் சீக்கியர்கள் தோல்வியுற்றனர். அதனால் 1849 – இல் லாகூர் உடன்பாட்டின்படி சீக்கிய அரசர் துலீப் சிங்கிற்கு ஓய்வூதியம் தந்து பஞ்சாபை பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் எடுத்துக்கொண்டது. அதன்பின் பஞ்சாப் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாணமாயிற்று.
சுதந்திரத்திற்கு முந்தைய பஞ்சாப் மாகாணம் பெரியதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்றபோது மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த மேற்கு பஞ்சாபின் 52% நிலப்பகுதி பாகிஸ்தானுக்கும், எஞ்சிய இந்துக்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு பஞ்சாபின் 48% நிலப்பகுதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலமாகவும் ஆனது.
ராபி, பியாஸ், சட்லெஜ் ஆறுகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கும், ஜீலம், செனாப் ஆறுகள் பாகிஸ்தானுக்குப் பிரிக்கப்பட்டது.
அமிர்தசரஸ் பொற்கோயில்!