தாஜ்மஹாலில் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் கூடுதல் கட்டணம்! MakkalPost

உத்தரப் மாநில பிரதேசம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலை 3 மணி நேரத்துக்கு மேல் சுற்றிப்பார்த்தால் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. முன்பு, தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஒரு முறை கட்டணம் செலுத்தினால், நாள் முழுவதும் (சூரிய உதயத்துக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவும், சூரிய அஸ்தமாவதற்கு அரை மணி நேரத்துக்குப் பின்பாகவும்) உள்ளே இருந்து வரலாம்.
ஆனால், இந்த புதிய நடைமுறையின் மூலம், சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலைக் காண உள்ளே நுழைந்த மூன்று மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில், கூடுதல் கட்டணத்தைச் செலுத்தினால்தான் வெளியே செல்ல முடியும். இதற்கான புதிய டோக்கன் முறையை இந்திய தொல்லியல் துறை அமல்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளே செல்ல பயன்படுத்தப்படும் டோக்கன் முறைதான் தாஜ்மஹாலுக்குள் நுழையவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் டோக்கன்கள் மூன்று மணி நேரத்துக்கு மட்டும்தான் செல்லுபடியாகும். தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து நிலவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும், தேவையற்றவர்கள் நுழைவதைத் தடுக்கவும் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாஜ்மஹாலின் கிழக்கு, மேற்கு நுழைவாயில்களில் 7 டோக்கன் முறை தானியங்கி கதவுகள், வெளியேறுவதற்கு 5 தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணிகளுக்கு தனி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 200-ம், சார்க் மற்றும் பீம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 450-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ. 1,100-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.