சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு MakkalPost

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து முருகன் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜூலை 1 முதல் சிறையில் உள்ளேன். சம்பவத்தின் போது இரவில் வேறு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டு சுமார் 8.15 மணி அளவில் காவல் நிலையம் திரும்பினேன். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பான புகார் மனுவில் கையெழுத்திடுமாறு காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கட்டாயப்படுத்தினார்.
அவர் கட்டாயப்படுத்தியதாலும், உயர் அதிகாரி என்பதாலும் நான் கையெழுத்திட்டேன். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகமாட்டேன். நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முருகனுக்கு ஜாமீன் வழங்கிய ஆட்சேபம் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் மனு தாக்கல் செய்தார். அப்போது இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒத்திவைத்தார்.