April 19, 2025
Space for advertisements

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்! MakkalPost


நாமக்கல்: தொடர் விடுமுறையால், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.

கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் இன்றி காய்ந்து பாறைகளாகத் தென்பட்டன. இந்த நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய அருவிகளான ஆகாய கங்கை, மாசில்லா அருவி, நம் அருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் விழுகிறது. கடந்த ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் ஜனவரி வரையில் கொல்லிமலையில் குளுகுளு சீசனையும், அருவிகளில் தண்ணீர் வரத்தையும் அதிகமாகக் காண முடியும். சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இந்த மாதங்களில் அதிக அளவில் இருக்கும்.

சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீக்கம்
கடந்த வாரத்தில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. மழை குறைந்ததையடுத்து, மறுநாளே அருவிக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 1, 300 படிகளைக் கடந்து சென்று நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். பலர் தங்களது செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில், சனி, ஞாயிறு விடுமுறையுடன் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் சேர்ந்து வந்ததால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கொல்லிமலையில் திரண்டனர்.

சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் கூறியது: அருவிக்குச் செல்லும் படிக்கட்டுப் பகுதியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை. 1,300 படிகள் கடந்து செல்வோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. முதலுதவிக்கான உபகரணங்களோ, பணியாளர்களோ இல்லை.

படிக்கட்டுகளில் இறங்கும்போது, ​​ஏறும்போதும் தாகம் ஏற்பட்டால், கையில் தண்ணீர் புட்டி இல்லையென்றால் சம்பந்தப்பட்ட சுற்றுலாப் பயணி பாதிப்புக்குள்ளாவார். அந்த பகுதிகளில் சிறிய அளவில் கடைகள் அமைத்து தண்ணீர், சத்துமிக்க பொருட்களை விற்பனை செய்யலாம். அருவிப் பகுதியில் பெண்கள் உடை மாற்றுவதற்கு அறைகள் ஏதுமில்லை. பாறைகளின் மறைவில் சென்று அச்சத்துடன் உடை மாற்ற வேண்டிய சூழல் உள்ளது. வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு குறைபாடுகளைக் களைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்
இதுகுறித்து கொல்லிமலை வனச்சரக அலுவலர் அறிவழகன் கூறியது: மழை பரவலாகப் பெய்ததால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட வன அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்றார்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements

You may have missed