குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலா பயணிகள்உற்சாகம் MakkalPost

குற்றாலத்தில் படகு சவாரி புதன்கிழமை தொடங்கியது.
குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் வெண்ணைமடைக் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு குழாமில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு ஆட்சியர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்து, குழாமைத் திறந்துவைத்தார்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. படகு சவாரியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
படகு குழாமில் 34 படகுகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான லைப் ஜாக்கெட்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூன்19இல் படகு சவாரி தொடங்கியது. நிகழ்வாண்டில் இக்குளம் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டதால் படகு சவாரி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு படகு குழாமிலிருந்து ரூ. 5 லட்சம் வருமானம் கிடைத்தது என்றார்அவர்.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். அரை மணி நேரத்துக்கு சவாரி செய்ய தனிநபர் செல்லும் கயாக் வகை படகுகளுக்கு ரூ. 95-ம், 4 பேர் செல்லும் துடுப்புப் படகுக்கு ரூ. 185-ம், மிதிபடகுக்கு ரூ. 150-ம், இருவர் செல்லும் மிதிபடகுக்கு ரூ. 120-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விழாவில், தென்காசி செங்கோட்டை வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் வி. உச்சிமாகாளி, தாய்கோ வங்கி துணைத் தலைவர் என். சேகர், தென்காசி ஒன்றிய அதிமுக செயலர் சங்கரபாண்டியன், மேலகரம் பேரூர் கழக செயலர் கார்த்திக்குமார், நகரச் செயலர் முத்துக்குமார், குற்றாலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் கணேஷ் தாமோதரன், மேலகரம் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் பிரிவு நிர்வாகிகள் திருமலைக்குமார், சுப்பிரமணியன், சார்பு அணி மாவட்டச் செயலர்கள் சாந்தசீலன், சேர்மபாண்டி, தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் குற்றஞ்சாட்டினார். ஆகியோர் கலந்துகொண்டனர்.