காரைக்கால் கடற்கரை சாலையில் சீகல்ஸ் உணவகம்? MakkalPost

காரைக்கால் கடற்கரை சாலை முகப்பில், 37 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டடத்தை பொதுப்பணித்துறை நிர்வாகம் இடிக்கத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறையின் அங்கமான சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், கடந்த 1982-ஆம் ஆண்டு உணவகம், கூட்டம் நடத்துவது போன்ற பல்நோக்குப் பயன்பாட்டுக்காக அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் மட்டுமே இது உணவாகவும், சுபநிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலும் பயன்பட்டது.
கட்டடத்தில் விரிசல், பழுதுபோன்ற காணங்களால் நீர்க்கசிவு ஏற்படத் தொடங்கியது. மேலும், உரிய பராமரிப்பு இன்றி கிடப்பில் போடப்பட்டது.
காரைக்கால் கடற்கரை சாலை, காமராஜர் சாலை சந்திப்பில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ள இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், சிறப்புத் திட்டங்களுடன் புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுமார் 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். புதுச்சேரியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எந்த அரசும் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
கட்டடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து, நகரின் முகப்புப் பகுதியில் அலங்கோலமாகக் காட்சியளிப்பதால், உடனடியாக இடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் தந்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின்பேரில், பொதுப்பணித்துறை நிர்வாகம் இக்கட்டடத்தை செவ்வாய்க்கிழமை முதல் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தி இடிக்கத் தொடங்கியது.
கட்டடத்தை இடித்துவிட்டு இந்த பகுதியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்திவரும் சீகல்ஸ் உணவகத்தை அமைக்க திட்டம் வகுத்திருப்பதாகவும், இதற்கேற்ப கூடம் அமைக்க திட்டம் உள்ளதாகவும் அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.